நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ள பணம்: மீட்டுத்தர முன்வந்த அமெரிக்கா
நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald lu) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தெற்கு, மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ ஆகியோருக்கு இடையில் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப உதவி
அதன்போது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உதவி இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு புதிய அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாரட்டுக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கலாசாரம்
அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் ஊழல் மற்றும் வீண் விரயம் தொடர்பில் அரசியல் கலசாரம் நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி ஊழலையும் வீண் விரயத்தையும் மட்டுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும், புதிய தொழில்நுட்பத்தை அரச துறையில் அறிமுகப்படுத்தி தரமான அரச சேவையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |