தாய்வான் துருப்புகளுக்கு அமெரிக்கா இரகசிய இராணுவப் பயிற்சி
அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது துருப்புகளுக்கு இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து வருவதை தாய்வான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சில அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா - தாய்வான் இடையிலான வலுவான உறவை உலகிற்கு வெளிக்காட்டும் முயற்சியாக இந்தத் தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தாய்னின் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு பொதுமக்கள் நினைப்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறியுள்ளார்.
தாய்வானின் பாதுகாப்பு
அமெரிக்க சட்டத்தின்படி தாய்வானின் பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கப்பட்டாலும், பொதுமக்கள் அந்த ஆயுத விற்பனையை மட்டுமே பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியுள்ளார்.

இருப்பினும், பல்வேறு இராணுவப் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் தாய்வான் ஏராளமான நடைமுறை இராணுவ அனுபவத்தைப் பெற முடிந்துள்ளது என்றும் சுட்க்காட்டியுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் சீனாவுடன் ஒரு மோதல் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகளின் நேரடித் தலையீட்டை தைவானின் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளடக்கவில்லை என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
சீனா எச்சரிக்கை
தாய்னைத் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் அதை பலவந்தமாகக் கைப்பற்றும் என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த இரகசியப் பயிற்சிகள் சீனாவைக் கோபப்படுத்தக்கூடும் என்பதால் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் பென்டகனும் அமெரிக்க பசிபிக் கட்டளையகமும் இந்த இராணுவப் பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், தாய்வானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்படும் AIT இரு நாடுகளின் கடலோரக் காவல் கப்பல்கள் ஒன்றாகப் பயணிக்கும் புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |