சீனாவுடன் பேரம் பேச தாய்வானைப் பகடைக்காயாக்கிய ட்ரம்ப்! ஆயுத விற்பனையை அதிரடியாக நிறுத்தம்
ஈரான் போருக்குத் தேவையான ஆயுத இருப்பை உறுதி செய்வதற்காகத் தாய்வானுக்கு வழங்கவிருந்த 14 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் தற்காலிகச் செயலாளர் ஹங் காவ் (Hung Cao) நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கையான எபிக் ஃபியூரி (Epic Fury) போருக்குத் தேவையான ஆயுதங்கள் நம்மிடம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவே இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆயுத ஒப்பந்தம்
இந்த ஆயுதப் பொதியில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் அடங்கும்.
சமீபத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு தாய்வானுக்கான ஆயுத விற்பனை குறித்து உறுதியற்ற நிலையில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த ஆயுத ஒப்பந்தத்தைச் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல பகடைக்காயாக (Negotiating chip) பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த அணுகுமுறை பல தசாப்த கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக உள்ளது.
அதேசமயம் ஆயுத விற்பனை நிறுத்தம் குறித்துத் தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்று தாய்வான் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தாய்வான் நீரிணைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |