மெக்சிகோ தக்காளி இறக்குமதிக்கு 17 வீத வரி: அமெரிக்காவின் புதிய தீர்மானம்
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கு 17 வீத வரியை அமெரிக்கா விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான புதிய தக்காளிகள் மீது 17.09 சதவீத ஆன்டிடம்பிங் வரியை அமெரிக்கா விதிக்கத் ஆரம்பித்துள்ளது.
இது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்கொள்வதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கை என்று வாஷிங்டன் தரப்பு தெரிவித்துள்ளது.
மெக்சிகோ தக்காளி
2019 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம், மெக்சிகோ தக்காளிகளை இதுபோன்ற கட்டணங்களில் இருந்து பாதுகாத்து வந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க வணிகத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்க வணிகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெக்சிகோ எங்கள் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாகும்.
இருப்பினும், நீண்ட காலமாக எங்கள் விவசாயிகள் தக்காளிகள் போன்ற பொருட்களின் விலையை குறைத்து, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் நசுக்கப்பட்டு வந்த நிலையில் அது இன்றுடன் முடிவடைகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவுடனான அணுகுமுறை
இந்த கொள்கை மாற்றம், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரந்த வர்த்தக கொள்கைகள் மற்றும் மெக்சிகோவுடனான அணுகுமுறையுடன் நேரடியாக ஒத்துப்போகிறது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க புதிய தக்காளி சந்தையில் மெக்சிகோ ஒரு ஆதிக்கம் செலுத்தும் நாடாக உள்ள நிலையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 30 வீதமாக இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் தக்காளி தேவையில் சுமார் 70 வீதம் மெக்சிகோ பூர்த்தி செய்கின்றது.
அமெரிக்க தக்காளி உற்பத்தியாளர்கள் நியாயமான முறையில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்து 2019 தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகும் தனது நோக்கத்தை அமெரிக்கா ஏப்ரல் மாதத்திலேயே சமிக்ஞை செய்திருந்தது.
தக்காளி விலை
இருப்பினும், இந்த புதிய வரிகள் அமெரிக்க நுகர்வோருக்கான தக்காளி விலையில் ஒரு பெரிய உயர்வை ஏற்படுத்தும் என்று பல வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மெக்சிகோ அரசு திங்கட்கிழமை தனது உள்நாட்டு தக்காளி உற்பத்தியாளர்களுடன் இணைந்து 17 சதவீத வரியின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார தாக்கத்தை தணிக்க செயல்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் பொருளாதாரம் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை பெரிதும் சார்ந்துள்ள நிலையில் அதன் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதம் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவிற்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

