ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விதிக்கும் கெடுபிடி!
ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதிசெய்வதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு அந்த இலக்கை அடையும் வரை ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் தொடர்ந்து பிரயோகிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz) இதனை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
அதேவேளையில், ஈரான் நல்லெண்ணத்துடன் செயல்படும் பட்சத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்கில் அல்-மோனிட்டர (Al-Monitor) அமைப்பினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய மைக் வால்ட்ஸ், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் என்பது கடந்த 47 ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் ஒரு தொடர்ச்சியே எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத ஆதரவு நாடான ஈரான், அணுஆயுதக் குடையின் கீழ் உலகத்தையோ அல்லது ஹோர்முஸ் நீரிணையையோ பிணையாகப் பிடிக்க நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது என்பதில் ட்ரம்ப் தெளிவாக உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் தான் அணு ஆயுதம் எதையும் தயாரிக்கவில்லை எனத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் தனது அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஈரான் சம்மதித்திருந்தது.
இருப்பினும், ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |