ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நெருங்குவோருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை யாராவது நெருங்க முயன்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், ஈரானின் அணுசக்தி நிலையங்களின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாகக் கருதப்படும் யுரேனியம், அமெரிக்க ராணுவத்தின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
அமெரிக்காவின் விண்வெளிப் படை (Space Force) மூலம் அந்த இடங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், யாராவது அந்தப் பகுதிக்குள் நுழைந்தால் அவர்களை அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்த ட்ரம்ப், அவ்வாறு எவரேனும் யுரேனியத்தை நெருங்கினால் அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Image Credit: ABC News
ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில், இந்த யுரேனிய விவகாரமே பெரும் தடையாக உள்ளது.
இந்த நிலையில், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, யுரேனியத்தை வெளிநாட்டிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
செறிவூட்டப்பட்ட யுரேனியம்
எனினும், தனது நாட்டின் மண்ணைப் போலவே யுரேனியமும் புனிதமானது என்றும், அதனை எந்தச் சூழலிலும் மற்ற நாடுகளுக்கு வழங்க முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தற்போது ஈரானிடம் சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள 60 வீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, ஈரான் தனது யுரேனியச் செறிவூட்டலைத் தீவிரப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |