பங்களாதேஷ் பொதுத் தேர்தல் : அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து
பங்களாதேஷ் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாததால் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களின் கருத்துக்களுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் தேர்தலின் போதும் அதற்கு முன்பும் நடந்த வன்முறைகளை கண்டிப்பதாகவும், அதற்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பு என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் நாளில் இடம்பெற்ற முறைகேடுகள்
பங்களாதேஷில் தேர்தல் நாளில் ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் முறைகேடுகள் பற்றி கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்து - பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டுப் பார்வையை முன்னேற்றுவதற்கு பங்களாதேஷுடன் தொடர்ந்து பணியாற்ற நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.
அவாமி லீக் கட்சி வெற்றி
பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளதுடன் 300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 223 ஆசனங்களை ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |