ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி! முக்கிய அமைப்பொன்றின் 22 உறுப்பினர்கள் பணிநீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், அந்நாட்டின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) கொள்கைகளை வகுக்கும் தேசிய அறிவியல் வாரியத்தின் (NSB) அனைத்து 22 உறுப்பினர்களையும் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இந்த உயர்மட்ட அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டிருப்பதை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் சட்டமியற்றுபவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கல்வித் துறை மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) உள்ளிட்ட பல முக்கிய முகமைகளைத் தொடர்ந்து, அரசாங்கக் கட்டமைப்பில் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
பணிநீக்க காரணம்
ட்ரம்ப்பினால் கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அறிவியல் வாரியத்திற்கு நியமிக்கப்பட்ட ரோஜர் பீச்சி என்பவர், இந்த நீக்கத்திற்கான எந்தக் காரணமும் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தங்கள் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சுருக்கமான மின்னஞ்சல் மூலமே இந்தப் பணிநீக்கம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு
இந்த நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அறிவியல் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற அறிவியல் குழுவின் மூத்த உறுப்பினர் ஜோ லோஃப்கிரென், இந்த வாரியம் இனி ஜனாதிபதியை தட்டிக் கேட்க முடியாத தீவிர விசுவாசிகளால் நிரப்பப்படுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இந்தப் பணிநீக்கங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |