சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான நாடு ! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.
இவ்வாறு, அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு
இவ்வாறான ஒரு நிலையில், அண்மைக்காலமாக கொலம்பியாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தான நிலை உருவானதாலேயே சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலம்பியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், பணத்திற்காகவும், உடமைகளுக்காகவும் கொல்லப்படுவது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்படும் சுற்றுலா பயணிகள்
அதன்படி, கடந்த ஆண்டு (2023) 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலை செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இதனால், அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |