இலங்கையில் தங்கத்தின் விலைக்கு சமனாக சென்றுள்ள கார்களின் விலை
இலங்கையில் பயன்படுத்திய கார்கள் தங்கத்திற்கு நிகரான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பிரான்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டு விலைகளை விடவும் கார்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக குறித்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
இலங்கை திவால்நிலையின் விளிம்பில் உள்ளது மற்றும் பணவீக்கம் அதிகமாக உள்ளது, இதன் விளைவாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு டொலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், டொலர்களை மிச்சப்படுத்த அரசு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா லாண்ட் குரூஸர் விலை 312,500 டொலர்கள் அல்லது ஏறக்குறைய 62.5 மில்லியன் ரூபாய் ஆகும். 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பியட் கார் தற்போது ரூ.6.17 கோடிக்கு விற்பனையாகி வருகிறது. கார்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் கூரையைப் பிரித்துக்கொண்டு விலை உயர்ந்துள்ள தகவல் அங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஆனால், சில வகை கார்களின் விலை என்பது இலங்கையில் பிரதான இடத்தில் சொகுசு வீடு வாங்குவதை காட்டிலும் அதிகம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
