தமிழ் இலக்கியப்பரப்பில் புது முயற்சி: 25 எழுத்தாளர்களின் கூட்டுக்கனவு நனவாகியது
ஜேர்மனியின் பிரதான நகரங்களில் ஒன்றான பிராங்க்போட் நகரில் தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு புது முயற்சியாக 25 எழுத்தாளர்களின் கூட்டுக்கனவு ஒன்று நேற்று(14) நனைவாகியுள்ளதாக துகள் வெளியீட்டகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு தியான்.பா தெரிவித்துள்ளார்.
துகள் வெளியீட்டகத்தினால் 2024 தைத்திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட 25 எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய உயிர்த்தடம் 2.0 என்ற புதினம் 13.09.2025 அன்று ஜேர்மனியில் வெளியீடு கண்டது. இது ஒரு துப்பறியும் நாவலாக ஈழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய மற்றும் வளர்நிலை எழுத்தாளர்கள் என்ற நிலை அடைந்தவர்கள் என 25 எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு கதைக்கருவினை ஒரு நாவலாக எழுதி உள்ளனர்.
பல திருப்பங்களை கொண்ட புத்தகம்
இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதிமுடிக்க அதன் தொடர்ச்சியினை பற்றிக்கொண்டு அடுத்த எழுத்தாளர் எழுதி அவருடைய முடிவைப் பற்றிக்கொண்டு அடுத்த பகுதியை எழுதுபவர் தொடர்ந்து செல்ல என்ற போக்கில் 25 எழுத்தாளர்களும் சீராகவும் பல திருப்புமுனைகளைக் கொண்டும் இப் பொத்தகம் உருவாக்கம் கண்டுள்ளது.
கொலை, குற்றம், துப்பறிதல் என்று மட்டும் நின்றுவிடாது. காதலும் அது சார்ந்த செயற்பாடுகளுமாக ஒரு ஊரின் நடப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்பொத்தகம் தனித் தமிழ் மொழியில் மட்டுமல்லாது. ஜேர்மன், டச், பிரஞ்ச், ஆங்கிலம், சிங்களம் ஆகிய ஆறு மொழிகளிலும் ஒரே மேடையில் வெளியீடு கண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிவகுமாரி பொறுப்பில் நடைபெற்ற நிகழ்வில் சுமித்திரா மற்றும் கண்ணன் மற்றும் டிலக்சனா ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க, மங்கள விளக்கேற்றல் மற்றும் பொதுச்சுடர் ஏற்றல் மலர்வணக்கம் ஆகியவை விருந்தினர்களாலும் எழுத்தாளர்களாலும் செய்யப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாணவிகளால் தமிழ்த்திரு தியான்பாவின் வரிகளில் உருவாகிய தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிவடிவில் ஒளிபரப்பப்பட்டது. இதை பாடி இருந்தவர் இசையாசிரியை விஜயகலா கிருபாகரன். தொடர்ந்து இலக்கியா சிறீக்காந்தனின் மாணவிகளால் வரவேற்பு நடனம் வழங்கப்பட்டது.
6 மொழிகளில் மொழியாக்கப்பட்டு வெளியீடு
வந்தோரை வரவேற்கும் மாண்பாக நடனம் நிறைவுபெற்றதும் வரவேற்புரையினை புதினம் எழுத்தாளரான கண்ணன் வழங்கினார். அதில் வருகை தந்திருந்த விருந்தினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவையினர் அனைவரையும் சிறப்பாக வரவேற்றமைந்தார்.
“இது எங்கோ ஒரு புள்ளியில் சுட்டப்பட்ட பொறி. இன்று தீயாகி தீச்சுவாலையாகி பெரும் பொத்தகமாக உருவெடுத்துள்ளதை நீங்கள் இன்று உணர்வீர்கள். அதுவும் ஒரே மேடையில் 25 எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதிய ஒரு புதினம் அதே மேடையில் 6 மொழிகளில் மொழியாக்கப்பட்டு வெளியீடு கண்டது தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் பாய்ச்சல் என்று என்று கருதுவதாக, நிகழ்வில் தலைமை உரை வழங்கிய கவிமகன் தெரிவித்தார்.
தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் சிறந்த நடனம் ஒன்றினை பரதக் கலைமணி சிவப்பிரியா சிவசோதி நெறியாள்கையில் மாணவிகள் வழங்கினர்.
காட்சிப்படுத்தப்பட்ட விபரண காணொளி
துகள் அமைப்பின் தமிழ்க்கல்வி வளர்ச்சி பிரிவு பற்றிய ஒரு விபரண காணொளி காட்சிப்படுத்தப்பட்டது மட்டுமன்றி. அது பற்றிய ஒரு சிறு உரையும் துகள் நிறுவுனர் தியான்.பா அவர்களினால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து எழுத்தாளர்களும் ஒளிப்படவடிவில் அவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அதன் முடிவில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக உருவாக்கப்பட்ட புதினத்தின் பொத்தகங்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டன. உயிர்த்தடம் 2.0 புதினத்தினை துகள் வெளியீட்டக நிறுவுனர் தியான்.பா வெளியீட்டுவைக்க பிராங்க்போட் தமிழ்மன்ற தலைவர் இராஜரட்னம் ரவிசங்கர் மற்றும் பிராங்போட் தமிழ்ச்சங்க தலைவர் பாலாஜி ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
தொடர்ந்து வந்த நிகழ்வுகளில், தமிழர்களின் மரபுப்பண்பிசையான பறையிசை நடனத்தை சொர்ணமாலதி நெறிப்படுத்தலில் மாணவர்கள் சிறப்பாக அவைக்குத் தந்தனர்.
பறையிசை நிறைவின் பின், தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்திருந்த புதினம் எழுத்தாளரும் ஆங்கில மொழிமாற்றுனருமான தேவிகா குலசேகரன் வாழ்த்துரையை வழங்கினார்.
தமிழ் இலக்கியப் பரப்பில் புதுப் படிக்கல்
தொடர்ந்து, தமிழ் ஆசிரியர் இளவழகன் புதினத்தின் தமிழ் பொத்தகத்தை ஆயுவுக்குட்படுத்தினார். அவரது ஆய்வுரையில் “ இப்பொத்தகமானது தமிழ் இலக்கியப் பரப்பில் புதுப் படிக்கல்லைத் திறந்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்”.
நூலாய்வுரை முடிந்த பின் பொத்தகத்தின் நான்காவது பகுதியை எழுதிய கண்ணன் தனது பகுதியை நாடகமாக உருவாக்கி வழங்கினார் அந்த நாடகத்தில் புதின எழுத்தாளர்களான சிறீதாஸ், ரவீன், கண்ணன். சஞ்சனா ஆகியோருடன் வாசுதா கண்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிறப்பான ஆற்றுகையை வெளிப்படுத்தி நாடகத்தின் பாத்திரக் காட்சிகளை அவைக்கு கண்முன்னே நாலாவது பகுதியைக் கொண்டுவந்தனர்.
பின், ஜேர்மன் மொழியில் பொத்தகம் தொடர்பான தன் அனுபவ உரையினை கீர்த்தனா தியான் சைலன் வழங்கினார். அதில் அவர் தன் மொழிமாற்றம் தொடர்பான அனுபவத்தையும் தன் பகுதியை எழுதிய போது ஏற்பட்ட அனுபவத்தையும் உயிர்த்தடம் 2.0 புதினத்தை பற்றியும் மிகச் சிறப்பாக அவைக்கு நல்லுரையினை வழங்கினார்.
தொடர்ந்து மதிப்பீட்டுரையினை தமிழ் ஆசானும் தமிழ் இலக்கியருமான மதிவாணன் சிறப்பாக ஆற்றினார். புதினம் தொடர்பான விடயங்களை அவர் பகிர்ந்து அவைக்கு பெரும் வாசிப்பு ஊக்குவிப்பை உருவாக்கினார்.
தொடர்ந்து, சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின் வருகைதந்திருந்த எழுத்தாளர்கள், மொழிமாற்றுனர்கள் வடிவமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும் மாண்பேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அதை துகள் நிறுவுனர் தியான்.பா,அவரது இணையாள் சுமதி வழங்கி மாண்பேற்றினர்.
தொடர்ந்து இறுதி நிகழ்வாக, எழுத்தாளர் ரவீன் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவனின் வாக்குக்கமைய சிறப்பாக நன்றியுரையினை வழங்கி நிகழ்வை நிறைவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
