பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த வல்லிபுர ஆழ்வார்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றாகும்.
கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத் திருவிழாவின் 15ம் நாளான தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் விசேட பூசைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார் தேரேறி வலம் வந்தார்.
தேரிலே பவனி வந்து அருட்காட்சி
முன்னே ஆஞ்ச நேயர் காவலாக செல்ல பிள்ளையார், இலட்சுமியை தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெரும் படையோடு பின்னே பெரும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நாளை (26) மாலை 04:00மணிக்கு சமுத்திரத் தீர்த்தமும் நாளை மறுதினம் (27) கேணித் தீர்த்தம் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறுவுள்ளது.
திருவிழாவிற்காக சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை காவல்துறையினரும், மேற்கொண்டுள்ளதுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளது.
விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை, தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - பிரதீபன், காண்டீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
