காணி விடுவிப்பு கோரி 23ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த தொடர் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று (25) 23ஆவது வாரத்தையும் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள எமது பூர்வீக நிலங்களை விடுவிப்பதாக அரச தரப்பால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இதுவரை நடைமுறைரீதியான தீர்வு வழங்கப்படவில்லை.
தீர்வை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், எமது பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் காணிகளை விடுவிப்போம் என்று கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அடுத்தவர் மீது விரலை நீட்டும் நிலை தொடரக்கூடாது.
சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், எமது காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பாக இராணுவத்தின் நடவடிக்கைககுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் நேரடியாக நடவடிக்கை எடுத்து தீர்வை வழங்க வேண்டும்.
23 வாரங்களாகத் தொடரும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எமது பூர்வீக நிலங்களுக்கு மீளச் செல்லக்கூடிய வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எமது பிரதான கோரிக்கையாகும்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |