உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை களஞ்சியப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு இன்று (05) முதல் முவரடங்கிய நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு, நீர்கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவ்வழக்குடன் தொடர்புடைய இரண்டு பிரதிவாதிகள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளத் தயாராகவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
கடூழிய சிறைத்தண்டனை
இதன்படி, அபு ஹனிஃபா மொஹமட் முஃபீட் மற்றும் அமீர் ஹம்சா மொஹமட் ஹமாஸ் ஆகிய இருவருமே தமக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதிபதி லால் பண்டார தலைமையில், ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இருவரைத் தவிர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான வழக்கில் 200 ஆண்டுகளுக்கும் மேல் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொஹமட் சாரிக் ஆதம் லெப்பை, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் மற்றும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் ஆகிய 4 பிரதிவாதிகளும் ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல்
இவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததுடன், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மற்றைய இரு பிரதிவாதிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் வனாத்தவில்லு லக்டோஸ் வத்த பகுதியில் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள், ஜெலக்னைட் குச்சிகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரிக் அமிலம், யூரியா போன்றவற்றைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் சட்டமா அதிபரால் இவர்களுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த பிரதிவாதிகளின் இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கை இன்றைய தினம் (05) முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |