கப்ராலுக்கு எதிரான கிரேக்க பிணைமுறி சட்டப்போரில் முக்கிய தீர்ப்பு இன்று
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரிய மனு மீதான உத்தரவு இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரேக்க அரசாங்க பிணைமுறிகளில் முதலீடு செய்ததால் அரசாங்கத்துக்கு ரூ.1.8 பில்லியனுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆங்கில நாளிதல் ஒன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனோஜ் தலகொடபிட்டிய தலைமையிலான நீதிபதிகள் குழாமில் உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சிறி ராகல ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
கிரேக்க பிணைமுறி
கப்ரால் தரப்பு வாதத்தின்படி, கிரேக்க பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு சட்டபூர்வமான முதலீட்டு நடவடிக்கையாகும் என்றும், அவருக்கு எதிராக குற்றவியல் பொறுப்பு ஏற்படும் வகையில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமக்கு எதிராக நான்காவது தடவையாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கப்ரால் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையிலான காலப்பகுதியில், கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், அதிக ஆபத்துடைய கிரேக்க அரசாங்க பிணைமுறிகளில் அரச நிதியை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 1,843,267,595.60 ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான முன்னைய சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்த நிலையில், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை மீண்டும் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்டது. முன்னைய வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் தொடர்புடைய தொகையை செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்ட பின்னரே புதிய வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகையை மீளப் பெறுவதற்கு இணங்கியதையடுத்து, கப்ரால் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட 1.84 பில்லியன் ரூபாய் நட்டத்தை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆரம்ப ஆட்சேபனை
அந்த காலக்கெடு 2026 மார்ச் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, Trial-at-Bar நீதிமன்றத்தில் வழக்கை முன்னெடுத்தது.
2026 ஜூலை மாதம் கப்ரால் தரப்பு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒருமனதாக நிராகரித்ததுடன், வழக்கை முழுமையாக விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.
தற்போது, வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரிப்பதற்கு முன்னர் தம்மை விடுதலை செய்யுமாறு கப்ரால் தரப்பு முன்வைத்துள்ள மனுவின் மீதே இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே, கிரேக்க பிணைமுறி வழக்கு தொடர்பில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள சட்ட நடவடிக்கையை சவால் செய்து கப்ரால் உயர் நீதிமன்றத்திலும் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு செப்டெம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அடுத்த கட்ட பரிசீலனைக்காக ஒக்டோபர் 9ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கப்ரால் தரப்பு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னைய குற்றப்பத்திரிகையை மீளப் பெற்ற பின்னர், வேறுபட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என வாதிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், Trial-at-Bar நீதிமன்றம் தமது ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்த தீர்மானத்தை இரத்து செய்து தம்மை விடுதலை செய்யுமாறும் அவர் உயர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
இதனால், நாளை Trial-at-Bar நீதிமன்றம் வழங்கவுள்ள உத்தரவும், எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையும் கிரேக்க பிணைமுறி விவகாரத்தின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
எவ்வாறாயினும், கப்ராலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்பதும், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |