சிலரது தனிப்பட்ட நோக்கத்திற்காக ஒருபோதும் இரத்துச் செய்ய முடியாது!
அரசியலமைப்பினூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஒரு சிலரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இரத்து செய்ய முடியாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை, அரச நிர்வாகத்திற்கு மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தானை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாகாணசபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளூராட்சி மன்ற முறைமையை பலப்படுத்துமாறு ஆளும் தரப்பின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இவை அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறானா தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக அரசியமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையை ஒருபோதும் நீக்க முடியாது. அதற்கான அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது.
இந்நிலையில், ஜூலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தல் முறைமையில் சட்ட சிக்கல் காணப்படுகிறன. பழைய முறைமையின் அடிப்படையில் தேர்தலை 3 மாத காலத்துக்குள் நடத்த முடியும். ஆனால் இதற்கு நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றின் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை உரிய காலத்தில் நடத்தியிருந்தால் இன்று அது தொடர்பில் மாறுப்பட்ட விமர்சனங்கள் தோற்றம் பெற்றிருக்காது.
மாகாண சபை முறைமையை வெள்ளை யானை என்று சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் ஊடாக பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரச நிர்வாகத்தில் மாகாண சபை முறைமை அவசியமானது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதியால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.