மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது வவுனியா நகரம் -பாடசாலைகளும் இயங்கா
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.
வவுனியா நகரில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான அவரச கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா நகரில் 54 கொவிட்தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.
அதன்படி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரிபவர்களின் சுகாதார தன்மையினை கருத்தில் கொண்டு அவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நகரின் சில பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட சந்தியில் இருந்து இறம்பைக்கும் மகளிர் பாடசாலை வரையான சந்தி,தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வரையான பகுதி, காமினி மகாவித்தியாலத்தை உள்ளடக்கிய பகுதிகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு அரச அதிபர் பணித்துள்ளார்.