வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்திருந்தனர்.
அவர்களை கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03.2024) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் காலை ஒன்பது மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.
அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
விளக்கமறியல்
இதனையடுத்து, குறித்த எட்டு பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் சார்பில் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.அருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா மற்றும் கொன்சியஸ் உள்ளிட்ட பலர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |