வேலன் சுவாமிகளின் கைதைக் கண்டித்து பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு!
வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த போராட்டம் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்களால் அமைதியாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக நாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கு எதிரான போராட்டம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த 15 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது, அறவழி எதிர்ப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
வேலன் சுவாமியின் கைதிற்கு கண்டனம்

அதன் பின்னணியிலேயே நேற்றைய தினம் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வேலன் சுவாமிகளின் சட்டத்திற்கு புறம்பான கைதைக் கண்டித்தே இன்று பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரை காவல்துறையினர் தொடர்ந்தும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
