விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமாக இருந்து சுகயீனமுற்ற நிலையில் உயிர்நீத்த விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (29) மாலை 4.45 மணியளவில் அவரது உடலிற்கு இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இடம்பெற்று நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பலதரப்பட்டோரும் வருகை தந்த வண்ணம் இருக்கும் நிலையில், தமிழ் நாடு முழுவதிலும் இருந்து மக்கள் திரண்டு வந்துகொண்டிருப்பதனால் அவரது உடலை தீவுத்திடலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மாலை நல்லடக்கம் செய்யப்படும்
தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இருந்த அவரது உடல் இப்போது தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது, அங்கு இன்று (29) காலை 06 மணி முதல் மதியம் 01 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி கொண்டு வரப்படவுள்ள விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு இடம்பெற்று மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1952 ம் ஆண்டு எட்டாம் மாதம் 25 ம்திகதி அழகர்சாமி ஆண்டாள் தம்பதிகளுக்கு மகனாக மதுரையில் பிறந்த இவர் பலரது மனங்களிலும் நிறைந்த ஒரு மா மனிதராக வாழ்ந்து மடிந்துள்ளார்.
ஈழத்தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட
தனது வாழ்நாளில் தன்னைப்போலவே பிறரையும் அதிகம் நேசித்த ஒருமனிதராக ஓய்வில்லாத ஒரு உழைப்பாளியாக மனிநேயம் மிக்க ஒருவராக அவர் வாழ்ந்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழர்களை அதிகம் நேசித்த அதேநேரம் ஈழத்தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவரான விஜகாந்த் இன்று (29) நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை அனைவரையும் சொல்லொணாத்துயருக்கு ஆளாகியுள்ளது.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் கொரோனாத்தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |