வட்டுக்கோட்டை காவல்துறையினரை கேலிப்பொருளாக்கிய வன்முறைக் கும்பல்!
வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடியில் இடம்பெற்ற வன்முறையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் நேற்று மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் முன் வெடி கொழுத்தில் கொண்டாடியுள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்களின் கும்பலே தம்மை அவமதித்து இந்தச் செயலைச் செய்ததாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடியில் கடந்த செப்டெம்பர் மாதம் கிராமத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர். சாதிய ஒடுக்குமுறையினால் இந்த மோதல் இடம்பெற்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சங்கரத்தையைச் சேர்ந்த பிருந்தாபன் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் நால்வர் நீதிமன்றில் சரணடைந்திருந்தனர். அவர்கள் நேற்று நவம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மல்லாகம் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை அடுத்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றிலிருந்து காவல் நிலையத்துக்கு திரும்பிய போது, அவர்களுக்கு முன் சந்தேகநபர்களைச் சேர்ந்த கும்பல் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பிருந்தாபன் மற்றும் சுதன் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.