இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 தினத்தை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ வன்னியரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் ஆட்சியின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்த விசிக எம்.எல்.ஏ வன்னியரசு தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை முன்வைத்தார்.
ஆணவப் படுகொலை
தொடர்ந்து உரையாற்றிய அவர் , விசிக தரப்பில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினாலும் சில முக்கியத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

தமிழக அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது, அதேபோல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், அறிவியலுக்கு முன்னுரிமை தரவேண்டும் எனவும் பேரவையில் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழர்கள் படுகொலை
அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போக்கிற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை தொடர வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்களை எதுவும் நீக்காமல் அப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 தினத்தை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என அவர் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |