ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்! (காணொளி)
அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் மீது கருத்து வெளியிட்ட வட கரோலினா மாநில குடியரசு கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் டொன் டாவிஸ், அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈழத் தமிழ் மக்களுடன் தாம் துணை நிற்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸில் நேற்று(12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடந்தும் அவர் கூறுகையில், “அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஈழத் தமிழ் சமூகத்துடன் நான் துணை நிற்கிறேன்.
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள்
ஆங்கிலேயர் கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, சிங்களவர்களின் ஆதிக்கம் காரணமாக தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டனர்.
தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து, அரச அனுசரனையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.
இது 30 வருட இன முரண்பாடுக்கு வழி வகுத்தது. இது 2009 ஆம் ஆண்டில் இன அழிப்பிற்கும் வித்திட்டது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிக்கு மத்தியில் சீனாவின் ஆதரவுடன் இலங்கை அதில் இருந்து விலகிக்கொண்டது.
நிரந்தர தீர்வு
இந்த நடவடிக்கை தமிழர்களுக்கான நீதியை மேலும் தடை செய்தது, அண்மையில் இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஆழ்ந்த கவலையளிக்கிறது.
Standing with the Eelam Tamil community in their struggle against oppression and injustice. We must find a permanent solution based on their right to self-determination that ensures stability and peace in the Indo-Pacific. pic.twitter.com/x2boQ4cek4
— Congressman Don Davis (@RepDonDavis) December 12, 2023
ஆகவே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டறிந்து, அவை தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நிலைத்தன்மை மற்றும் சமாதானத்தை உறுதி செய்வதற்கான நிரந்தர தீர்வு வழங்கப்படுவதானது இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதிப்பாடுகளுக்கு நாம் மதிக்க வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |