மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சற்றுமுன்னர் வெளியான எச்சரிக்கை
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினூடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோனியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை
கால்நடை மேய்ப்பவர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு
“முல்லைத்தீவு மாவட்டம் கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே உடைந்துள்ளதால், தற்போது (09.12.2025 P.M 9.30) பெய்துவரும் தொடர்ச்சியான கடும் மழையினால் அப்பகுதியில் பெருமளவு நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோடாலிக்கல்லு முன்புறத்தில் உள்ள முள்ளியவளை – நெடுங்கேணி வீதி நீரில் மூழ்கியுள்ளது. எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் முக்கியமாக இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகள் இருப்பின், முள்ளியவளை -ஒட்டிசுட்டான் – நெடுங்கேணி வீதியை பயன்படுத்தவும்” என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தி - தவசீலன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |