நீர் விநியோகம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய நாட்களில் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக, நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை(National Water Supply & Drainage Board) தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு நாளும் கணிசமான நேரத்திற்கு நீர் விநியோகம் தடைபடுகிறது, மேலும் சபையால் அடையாளம் காணப்பட்ட உயரமான பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு பவுசர்கள் மூலமாக நீரை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீர் விநியோகம்
தற்போதைய நாட்களில் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதுடன், நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீர் பயன்பாட்டைக் குறைத்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இதனூடாக, நீர் விநியோக அமைப்பில் நீர் அழுத்தத்தை உகந்த அளவில் பராமரிக்க முடியுமெனவும், அவசரநிலைகளைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவாக இருந்தாலும், மக்களின் நீர் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நீர் உற்பத்தியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றும், சாதாரண அளவை விட சுமார் 102 மடங்கு அதிக அளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரட்சியான காலநிலை
உப்பு நீர் ஆற்று நீரில் கலப்பதைத் தடுக்க தற்காலிக தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வரட்சியான காலநிலை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தொடர்புடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
