தமிழ் தேசிய விடுதலைக்காக போராட வேண்டும் : சிறிநாத் எம்.பி வலியுறுத்தல்
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த நாடு முன்னேற்றகரமான பாதைக்கு செல்ல முடியாது என சிங்கள அரசும் சிங்கள தேசிய இனமும் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் (Ilaiyathambi Srinath) தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2009 இனவழிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன் தமிழ் தேசிய விடுதலைக்காக இளம் சந்ததியினர் தொடர்சியான போராட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு (Batticaloa) சத்துருக் கொண்டான் நினைவு தூபியில் வடகிழக்கு பொங்கு தமிழ் பேரவையின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (12) கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பட்டலந்தை அறிக்கை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் எங்கெல்லாம் மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே அங்கெல்லாம் இந்த கஞ்சி வழங்கும் ஏற்பாடு இடம்பெறும் இந்த பிரதேசத்தில் பாரிய படுகொலை செய்யப்பட்ட வரலாறு இருக்கின்றது.
இனவழிப்பு நோக்கத்துடன் தமிழர்களுடைய விடுதலையை நசிப்பதற்காக திட்டமிட்டு பல பிரதேசங்களில் நடாத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் சத்துருக்கொண்டான் படுகொலை கூட 186 அப்பாவி தமிழ் மக்கள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அந்த கொலைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நீதியின்றி முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இந்த அரசு பட்டலந்தை வதை முகாம் தொடர்பான விடயத்தை கையில் எடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள கொண்டு வருகின்றது.
அதேவேளை தமிழ் பிரதேசம் எங்கும் கடந்த போராட்ட காலத்திலே பல படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் சாட்சிகள் ஆவணங்களாக இருக்கின்ற பொழுது அது தொடர்பாக எந்த விதமான முனைப்புக்கள் காட்டப்படாமல் தற்போது கூட தமிழ் தேசிய இனத்தை உதாசீனப்படுத்துகின்றது.
2009ம் ஆண்டு இறுதி யுத்தம்
இவ்வாறு தமிழ் மக்களது கோரிக்கையை செவிமடுக்காத போக்கு இந்த நாட்டிலே தமிழ் மக்கள் வாழ்வதற்கான உறுதிப்படுத்தலை வழங்காது சிங்கள தேசிய பௌத்த அரசியல் நடந்து கொள்கின்றது.
அந்த வகையில் 2009ம் ஆண்டு யுத்த இறுதிக்கட்டத்திலே பொது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இது எங்களுடைய இனத்தை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்காக தமிழர்களுடைய இன பரம்பலை குறைத்து நிர்கதியற்ற கையேந்தும் நிலையில் வாழ வேண்டும். போராடுகின்ற நிலமையிலே தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகளை என்றும் கேட்க கூடாது என திட்டமிட்ட வகையில் நடந்தேறியுள்ளது.
அதற்கான நியாம் கூட இன்றுவரையும் எந்த விதமான வகையிலும் முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களாக அதற்கான முனைப்புக்களை தமிழ் தேசிய சக்திகள் தமது இனத்தின்பால் பற்றுக்கொண்ட அமைப்புக்கள் முன்னெடுக்கின்றபோதும் அதற்கான எந்தவிதமான அனுமதியும் அங்கீகாரமும் இந்த நாட்டில் வழங்கப்படவில்லை.
படுகொலை செய்யப்பட்ட மக்கள்
இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதியாக வாழமுடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் கூட மிக தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக ஒடுக்கப்படுகின்ற நிலமையே காரணமாக இருந்திருக்கின்றது.
எனவே அவற்றை சிங்கள தேசிய இனம் புரிந்து கொள்ளாத வகையிலே இந்த நாட்டிலே ஒரு சுபீட்சமான நாடாக முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த இனவழிப்புக்கு தமிழ் மக்கள் இன ரீதியாக கொத்து கொத்தாக அழிக்கப்பட்டனர். அதற்கான நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான பல செயற்பாடுகள் அரங்கேறியுள்ளது என எதிர்கால அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவேண்டும்.
இந்த இறுதி யுத்தத்ததில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இதய பூர்வமாக அஞ்சலி செலுத்துவதுடன் அவர்கள் எந்த இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தார்கள் என்ற செய்தி சர்வதேசத்திற்கு மிக ஆணித்தரமாக சொல்ல வேண்டிய தருணம்” இது என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
