மழையுடன் கூடிய வானிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12.10.2024) வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |