அடுத்த 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் புதுப்பிக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றிலிருந்து (19.01.2025) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை (Matale) , நுவரெலியா (Nuwara Eliya), பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை | காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று | நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
கடல் நிலை | கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல). இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். |
இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |