அதிபர் ரணிலின் வடக்கு விஜயத்தின் நோக்கம் என்ன...
தான் வடக்கிற்கு வருகை தரும் போதெல்லாம், வடக்கில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டால், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வும் அரசியல் தீர்வு குறித்து மட்டுமே மக்கள் தன்னை அணுகுவதாக சிறிலங்கா அதிபர் ரணில் கூறியிருந்தார்.
அதைத்தாண்டி பல பிரச்சினைகள் உள்ளனவென்றும் அதனை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் ரணில் விக்ரமசிங்க அண்மைய வடக்கு விஜயத்தின் போது கூறியுள்ளார்.
இதன் வாயிலாகவும் வடக்கு கிழக்கு மக்களின் பிரதான விடயங்களை தீர்ப்பதில் இன்றைய அதிபர் ரணில் கொண்டுள்ள கரிசனையும் உண்மைத் தன்மையும் தெளிவுபெற்று இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படி எனில் ரணிலின் வடக்கு விஜயத்தின் நோக்கம்தான் என்ன...
ரணிலின் நான்கு நாட்கள் விஜயம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில், வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் ஜனவரி 4ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த அதிபர் 7ஆம் திகதி தனது பயணத்தை நிறைவு செய்திருந்தார்.
மாவட்ட அரச அதிகாரிகளுடனான சந்திப்பு, பல்கலைக்கழக சமூகத்துடனான சந்திப்பு, இளைஞர்களுடனான சந்திப்பு, தமது கட்சி உறுப்பினர்களுடான சந்திப்பு என்று பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை இதன் போது அதிபர் நிகழ்த்தி இருந்தார்.
அத்துடன் அண்மையில் தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடகி சிறுமி கில்மிஸாவையும் சந்தித்துக் கொண்டார்.
அதிபர் ரணிலின் வருகைக்கு எதிராக பலத்த எதிர்ப்பு போராட்டமும் இடம்பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் போராட்டக்கார்களை காவல்துறை தடுப்புக்களின் ஊடாக தடுத்து வைத்திருந்தனர். இதேவேளை யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
அதிபர் ரணிலின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேவேளை போராட்டங்கள் ஏற்படுத்தப்படாத வகையில் தடையுத்தரவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அதிபர் ரணிலின் வருகையின் போது போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருபது பேருக்கு இரண்டு வழக்குகளின் ஊடாக தடையுத்தரவை காவல்துறையினர் கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கின் குரலை கேளுங்கள்
வடக்கு கிழக்கிற்கு வருகை தருகின்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பது அடிப்படையான அணுகுமுறையாக இருக்க வேண்டும். அந்தக் குரல்களை கேட்காமல் அரச அதிகாரிகளை மாத்திரம் சந்திப்பதன் வாயிலாக எந்த மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது. அது பயன் தருகிற பயணமாகவும் அமைய இயலாது.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன உரிமைகளுக்காக ஈழத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடுகிற அளவுக்கு இங்கு ஆழப் புரையோடியுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது. இன்றும் இன ஒடுக்குமுறை தொடர்கின்ற நிலையில் நடந்த இனவழிப்பின் பாதிப்புக் குரல்களை முதலில் கேட்க வேண்டும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் சந்திப்பு ஒன்றில் பங்கெடுக்க எனக்கும் ஓர் அழைப்பு கிடைத்திருந்தது. எதை வேண்டுமானாலும் பேச வேண்டும், அனுமதி கிடைக்குமா என்று கேட்டேன். வாய்ப்பில்லை என்ற பதில் வரவும் அந்த கலந்துரையாடலை தவிர்க்க தீர்மானித்துக் கொண்டேன்.
இந்த நாட்டின் எரியும் பிரச்சினை தொடர்பில் பேச முடியாது என்ற போது, எங்கள் நிலம் நாளும் பொழுதும் நெருக்கடியில் உள்ள பிரச்சினை தொடர்பில் பேச முடியாத போது, நாம் அதில் கலந்து கொள்வது, அதிபர் ரணிலின் வடக்கு விஜயத்தையும் அவர் கொண்டிருந்த அசிரத்தைப் போக்கையும் அங்கீகரிப்பதாகவே அமையும். அதனையே இப் பயணத்தில் ரணில் சாதிக்க முனைந்துள்ளார்.
கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு
அரசியல் தீர்வு குறித்துப் பேச வாய்க்கட்டா...
நாயிற்கு வாய்க்கட்டு போட்டுவிட்டுள்ளார்கள் என்று சொல்லுகிற ஒரு மரபுமொழி தமிழர் தேசத்தில் உள்ளது. அதைப்போலவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு விஜயத்தின் போது அரசியல் தீர்வு குறித்து தெளிவுபடுத்த வாய்க்கட்டு போடப்பட்டுள்ளதா....
நான் வடக்கிற்கு வருகைதரும் போதெல்லாம் மக்களிடம் பிரச்சினை என்னவென கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சினைகளுடன் மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள் என்றும் அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன் என்றும் ரணில் கூறியிருப்பது இதனாலா.....
சிறிலங்கா அதிபரின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்ணாயக்க கூறியிருக்கிறார்.
அத்துடன் காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் வடக்கிற்கு வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை என்றும் அதிபர், ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல என்றும் வடக்கில் வைத்தே தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான விமல் ரட்ணாயக்கா தெரிவித்திருக்கிறார்.
வடக்குப் பொருளாதாரத்தில் கண்ணா...
இலங்கை இனப்பிரச்னைக்கு நிலைபேறான தீர்வொன்றை இம்முறை தான் நிச்சயம் வழங்குவதாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் நாளன்று, 9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் கலந்துகொண்டு கொள்கை பிரகடன உரையை நிகழ்த்திய வேளையில் அதிபர் ரணில் கூறியிருந்தார்.
இதுவரை நடத்தப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும், இம்முறை எவ்வாறாயினும், அதனை வெற்றியடையச் செய்வதே தமது எதிர்பார்ப்பு என்றும் ரணில் கூறியிருந்தார்.
அத்துடன் நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகளாகும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 27ஆம் நாளன்று தென்னிலங்கையில் ஒரு பாடசாலை நிகழ்வின் போது கூறியிருந்தார்.
இப்படி அடிக்கடி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று அதிபர் கூறி வந்தாலும், நடைமுறையில் அதன் வெளிப்பாடு ஏமாற்றத்தையே அளிக்கின்றது.
பொருளாதார மேம்பாடு அடைவதை மாத்திரம் இலக்காக கொண்டு பேசும் ரணில். அரசியல் தீர்வு மேம்பாடு அடைந்தால் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவே தோன்றுகிறது.
வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் ஒன்று இருக்கிறது என்றும் அண்மையில் அதிபர் ரணில் கூறியிருந்தார்.
வடக்கில் இருக்கும் பொருளாதார வளத்தை இலக்கு வைத்து அதனைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுகிற எண்ணத்துடன் மாத்திரம்தான் வடக்கிற்கு ரணில் வந்தாரா...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 08 January, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.