ரணில் அரசு புலம்பெயர் அமைப்புக்களை இலக்கு வைப்பது ஏன்....
உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசுடன் நடாத்திய சந்திப்பும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடாத்திய சந்திப்பும் புலம்பெயர் தேச அமைப்புக்கள்மீதான யுத்தம் என்கிற கருத்துநிலை இப்போது பவரலாக வலுப்பெற்று வருகின்றது.
அத்துடன் உலகத் தமிழர் பேரவையின் இலங்கை அரசுடான சந்திப்பு, ஈழத் தமிழ் தரப்பின் சந்திப்பல்ல என்ற தெளிவும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
இலங்கை அரசு உள்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பாதிக்கப்பட்ட குரல்களை செவிமடுக்காமல், உள்நாட்டில் உள்ள தலைவர்களின் கருத்துக்களை கேட்காமல் புலம்பெயர் அமைப்புக்களுடன் சந்திப்பை நடாத்துவது என்பது புலம்பெயர் அமைப்புகள்மீதான திட்டமிட்ட இலக்கு வைப்பு என்பதும் புலனாகத் துவங்கியுள்ளது. ஏன் இவ்வாறு இலங்கை அரசு புலம்பெயர் அமைப்புக்களை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது?
புலம்பெயர் தேசத்தில் கிடைத்த அங்கீகாரம்
புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடு கனடா. அந்நாட்டின் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி வைத்திருந்தார். பிராம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழத் தேசியக் கொடியை அதுவும் குறித்த நகரசபையின் முதல்வர் ஏற்றிய நிகழ்வு என்பது தமிழீழத்திற்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் என்று புலம்பெயர் தேச மக்களும் தாயக மக்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். அண்மையில் புலம்பெயர் தேச நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த தமிழீழக் கொடி நாள் நிகழ்வுகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய குறிப்பில், “இந்த நிலையில் இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம்.
இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமைமீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம்…” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இனப்படுகொலை என அறிவித்த கனடா
உலகில் நீதிக்கும் அறத்திற்குமுரிய நாடாக கனடா மிளிர்ந்து வருகின்றது. இதன் ஒரு அம்சமாய் கடந்த சில மாதங்களின் முன்னர், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டிருந்தது. அந்த வகையில் ஈழத் தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்தும் முன்மாதிரி நாடாக கனடாமீது கவனம் திரும்பியது.
கடந்த மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூறியிருந்தார்.
“நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என்றும் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன, பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.
கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எமக்கு அக்கறைகள் உள்ளன…” என்று கனடா பிரதமர் விடுத்த செய்தி இலங்கையை உலுக்கியிருந்தது.
அத்தோடு,“கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.
இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் “மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிறகாக குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது…”எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படுத்திய கருத்து, ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான ஏக்கத்திற்கு கிடைத்த அங்கீகரிப்பு.
புலம்பெயர் எழுச்சியை முடக்கவா...
அது மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை அவசியம் என்றும் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே கூறியிருந்தார்.
இதேபோல இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளியிடும் தீர்மானமொன்றை அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் அண்மையில் நிறைவேற்றியிருந்த போதும் சிறிலங்கா அரசின் அணுகுமுறைகள், இராணுவ மயமாக்கல் என்பன குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசுக்கு எதிராக எழும் அரசியல் நடவடிக்கைகளை கண்டு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டுள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புக்களின் எழுச்சியை முடக்குவதன் வாயிலாக அதனை முறியடிக்க எண்ணியுள்ளது.
இந்த அடிப்படையில் தான் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடனம் என்ற பெயரில், ஈழத் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை ஒழிப்பதுடன் புலம்பெயர் தேச அமைப்புக்களின் எழுச்சிச் செயற்பாடுகளையும் முடக்க திட்டம் தீட்டியுள்ளது.
என்றபோதும் கூட அது புலம்பெயர் தேசத்தில் குறிப்பிடத்தக்க விழிப்பு நிலை ஏற்பட்டு வருகின்றது. “எங்கள் மக்கள் தொகை முழுவதையும் தீர்மானிக்க எந்த ஒரு அமைப்புக்கும் அதிகாரம் இல்லை”என்று கனடாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி சர்வதேச ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் "ஒரு பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை எடுப்பது, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிப்பதற்கு ஒருமித்த முடிவு எடுக்கப்படுவதை உறுதிசெய்ய, செயற்படும் ஈழத் தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனையை உள்ளடக்கியிருக்க வேண்டும்." என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதும் கவனிக்க வேண்டியது.
விழிப்புடன் இருக்க வேண்டிய காலம்
உலகத் தமிழர் பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ள நிலையில், “மகிந்த ராஜபக்ச, எமது மக்களைச் சிதைத்து, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த முக்கிய போர்க் குற்றவாளி.
அவர் இலங்கையை திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்குத் தகுதியான தலைவர் அல்ல, அவருடைய சொந்த சிங்கள மக்களால் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்படிப்பட்டவருடன் பழகுவது ஈழத் தமிழர்களுக்கு மிகவும் அவமானகரமானது.” என்று கனடாவை சேர்ந்த நிமால் விநாயகமூர்த்தி கூறியிருப்பது முக்கியமானது.
இதேவேளை இலங்கை அரசுடன் நடந்த சந்திப்பு குறித்து கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
“கனேடிய வர்த்தக சமுகத்துடன் இலங்கை வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹான் டொங் மற்றும் திருமதி ரேச்சல் தோமஸ் ஆகியோர் கனேடிய அரசாங்கம் சார்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வரவில்லை” என்றும் “கனேடியர்களை மோசடி மற்றும் ஊழல் நிறைந்த ஒரு தோல்வியுற்ற நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதில் வருந்துகிறேன்…” என்றும் அவர் கூறியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
புலம்பெயர் தேச அமைப்புக்களுடன் கனேடிய மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளீர்ப்பதன் மூலமாக கனடாவில் ஏற்பட்டு வரும் ஈழ எழுச்சியை கட்டுப்படுத்த சிறிலங்கா மேற்கொள்ளும் முயற்சிகள் தெளிவாக புலப்படுகின்றன.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். 2009இல் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், நீதிக்காகவும் உரிமைக்காகவும் தவித்து வரும் இனத்தை இன்னமும் ஒடுக்கவும் இல்லாமல் செய்யவும் இலங்கை அரசு பல வழிகளில் முயற்சித்து வருகின்றது. எனவே ஈழத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தேசங்களிலும் எம் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 31 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.