லிபியாவின் நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும் : விஜேதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு
நாட்டைப் பொறுப்பேற்க யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் நாங்கள் பொறுப்பேற்காமல் விட்டிருந்தால் நாடு லிபியாவின் நிலைமைக்கு சென்றிருக்கும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள்
“சுமார் 450 வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, .டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே சர்வதேசத்துக்கு முன்னால் சுதந்திர தேசமாக மாறியது.
நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த 4வருட காலத்துக்குள் கொரோனா தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளினால் இந்த நாடு அராஜகமானது. நாட்டை பொறுப்பேற்க எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படும்போது இந்த நாடு மிகவும் துரதிஷ்ட நிலையிலே இருந்தது.
லிபியாவின் நிலைமை
அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் அராஜகமாகிய நாட்டை பொறுப்பேற்றோம்.
அன்று நாடு அராஜகமாகிய சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், நாடு லிபியா போன்ற நிலைமைக்கு செல்ல இடமிருந்தது.
தற்போதைய அதிபரின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி இந்த நாட்டை கொண்டுவந்திருக்கிறோம்.
76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள் மக்களின் கஷ்டங்கள் ஒழியக்கூடிய, செளபாக்கியத்தை அடையும் வருடமாக மாறும் என நம்புகிறோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |