வேட்டைக்குச் சென்ற குழுக்களை அதிரடியாகக் கைதுசெய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் - புத்தளத்தில் சம்பவம்
வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 4 குழுக்களைச் சேர்ந்த 12 பேர் லருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் இன்று(27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 8 பேர் தப்பியோடியதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் தொடர்ந்தும் சட்டவிரோதமாக விலங்குகள் வேடையாடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இரண்டு நாட்களாக வனஜீவராசிகள் திணைக்களம் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள், 16 ரவைகள், 7 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரவைகள், வேட்டைக்கு பயன்படுத்தபடும் வெடிபொருட்கள், 5 தொலைபேசிகள், 7 கத்திகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட 12 பேரையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை பிணையில் விடுவித்துள்ளதுடன் எதிர்வருகின்ற 29ம் திகதி புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.