யாழ். மக்களே அவதானம் : கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய பண மோசடி
கனடாவிற்கு (Canada) அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (25.05.2025) யாழ். (Jaffna) வடமராட்சி, செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கடந்த 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்.
பலரிடம் பண மோசடி
அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.
குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி காவல்துறையினரின் உதவியுடன் நேற்று செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்,
கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில் சந்தேக நபரை இன்று (26.05.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தன்னுடைய பணத்தை மோசடி செய்த குறித்த பெண்ணிடம் இருந்து தனக்குரிய பணத்தை மீள பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்ப பெண் காவல்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
