வெற்றிகரமாக நிறைவுற்ற உலகத் தமிழ் தொழிலதிபர்களின் மாநாடு!!
லண்டனில் இடம்பெற்றுவரும் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்களின் பூகோள மாநாட்டின் அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
அறுபதுக்கும் மேலான உலக நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்களும் திறனாளர்களும் ஒன்றுகூடி வந்த எட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டன் மாநகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்று இருந்தது.
மே 5,6,7 நாட்களில் நடைபெற்ற தி-ரைஸ் - எழுமின் அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி ஜாம்பியா, ஜிம்பாப்வே, நைஜீரியா, மெக்சிகோ, துருக்கி - குர்திஸ்தான், ஈராக் போன்ற தமிழர்கள் சிறிய எண்ணிக்கையில் வாழும் நாடுகளிலிருந்தும் பங்கேற்றார்கள் என்பது இம்மாநாட்டின் சிறப்பாகும்.
இதேவேளை, தமிழக அரசின் சார்பில் தகவல் மற்றும் கணினித் தொழில்த் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மனோ தங்கராஜ் அவர்களும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.அஜய் யாதவ் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
குறித்த மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வில் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் தமிழகத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரித்து உலகளாவிய ரீதியில் ஒரு முன்னணி பசுமைச்சங்கிலி தமிழர்களால் உருவாகப்படும் முன்னெடுப்புகள் உட்பட்ட சில முக்கியமாக திட்டங்கள் கலந்துரையாடல்களில் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் இரண்டாம் நாள் அமர்வில் தமிழக அமைச்சரின் உரையுடன் சில முக்கிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகளுடன் சில விசேட உரைகளும் இடம்பெற்றன.
மாநாட்டின் முக்கிய நற்பயன்கள்,
1. தமிழகத்தில் முதலீடுகள் செய்ய மாநாட்டில் பங்கேற்ற பல உலகத் தமிழ் தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள். அவர்களை தமிழக அரசின் சார்பில் தமிழக அமைச்சர் மாண்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்கள் சந்தித்தார்கள். உரிய வாய்ப்புகளை அடையாளப் படுத்தி ஒற்றைச் சாளர முறையில் தடையற்ற வழிவகைகளை செய்து கொடுத்தால் தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய்வரை முதலீடு செய்வதற்கு அமெரிக்காவில் நண்பன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் 'நண்பன் தொழில் வணிகக் குழுமம்' முன்வந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளை மாண்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்கள் நண்பன் குழுமத்துடன் நடத்தினார்.
2. தமிழக அரசு வரவேற்குமேயானால் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பமாக இருக்கும் கனடா நாட்டின் 150 தொழில் வணிக நிறுவனங்களை அந்த நாட்டின் அனைத்துலக தொழில் வணிகத்திற்கு பொறுப்பாய் இருக்கும் அமைச்சர் அவர்களின் தலைமையில் வரும் தை பொங்கல் காலத்தில் தமிழகம் அழைத்து வருவதற்கு தி-ரைஸ் எழுமின் கனடா அமைப்பு விருப்பம் தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநாட்டில் தி ரைஸ் எழுமின் கனடா அமைப்பின் முதன்மை தலைவர்களுள் ஒருவரான திரு. ஸ்டான் முத்துலிங்கம் அறிவித்தார்.
3. வருகின்ற ஜூலை மாதம் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா வருகை தரும்போது தமிழகத்தில் முதலீடு செய்யவும் தமிழகத்தில் மற்றும் வடகிழக்கு இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தயாராக இருக்கிற 50க்கும் மேலான தமிழ் தொழிலதிபர்களை இணைத்து அவர்களை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் ஒருங்கிணைக்க லண்டன் மாநாடு அறிவித்துள்ளது.
4. பிரித்தானியா, அமீரகம் , பஹ்ரைன் நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ATDXT என்ற நிறுவனம் தமிழகத்தில் தரவு காப்பு டேட்டா சென்டர் உருவாக்க 20 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக மாண்புமிகு அமைச்சர் திரு தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் திரு ஜி எஸ் மூர்த்தி அறிவித்தார்.
5. தமிழகம், வட கிழக்கு இலங்கை மலையகம், மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கணினித்துறையில், தமிழ் தொழில் முனைவோரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக அளவில் வணிக மயப்படுத்த 10 மில்லியன் டாலர்கள் நிதி முதலீடு செய்வதாக கனடா நாட்டின் தொழிலதிபர் திரு பிரணவன் சம்புநாதன் லண்டன் மாநாட்டில் அறிவித்தார்.
6. தமிழர்களின் மரபுக் கலைகளான சிலம்பம், களரி அடிமுறை, வர்மம் ஆகியவற்றை மக்கள் மயப்படுத்தவும், உலக மயப்படுத்தவும் லண்டன் மாநாடு முடிவு செய்தது. குறிப்பாக சிலம்பம் களரி அடிமுறை இரண்டையும் 2035 ஆம் ஆண்டுக்குள் உலக மயப்படுத்தி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம் பெறச் செய்வதற்காக தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாநாடு விருப்பம் தெரிவித்தது. இதற்காக மாநாட்டு அரங்கில் இருந்தவர்கள் ஐந்து நிமிடங்களில் மூன்று கோடி ரூபாயை திரட்டி அறிவித்தார்கள்.
7. தி ரைஸ் எழுமின் லண்டன் மாநாட்டில் பங்கேற்ற தமிழர்கள் தமக்கிடையே 250க்கும் மேலான தொழில் வணிக ஒப்பந்தங்களை செய்துகொண்டார்கள். இந்த தொழில் வணிக ஒப்பந்தங்களின் கூட்டு மதிப்பு சுமார 1500 கோடிக்கு மேல் இருக்கும்.
8. தமிழகம் , இலங்கையில் மலையகம் மற்றும் வட கிழக்கு இலங்கை, மலேசியா, மியன்மார் போன்று தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் இயற்கை வேளாண் உற்பத்தியை விரிவுபடுத்தவும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தை படுத்த உதவிடவும் 100 மில்லியன் டாலர் நிதியம் ஒன்றினை உருவாக்கவேண்டும் என்று உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் லண்டன் மாநாட்டில் முடிவு செய்து அறிவித்துள்ளார்கள். இந்த நிதியம் அடுத்த 3 ஆண்டுகளில் இயங்கு நிலைக்கு வரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
9. தமிழர்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தவும் சிறு குறு தொழில் முனைவோரின் தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கவும் தமிழ் பெண் தொழில் முனைவோரை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கும் நோக்கங்களுடன் ‘அனைத்துலக தமிழ் பெண்கள் கூட்டமைப்பு' தி ரைஸ் எழுமின் லண்டன் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பெண்கள் இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கான முதற்கட்ட நிதியமாக ஒரு மில்லியன் டாலர்களை ‘நண்பன் தொழில் வணிக குழுமம்’ முன்வந்து மாநாட்டு அரங்கில் மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் அறிவித்தது.
10. ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயளர், சிந்து சமவெளி ஆய்வாளர் திரு R பாலகிருஷ்ணன் IAS அவர்கள் எழுதி வெளியிட்ட “ஒரு நாகரீகத்தின் பயணம்: சிந்து வெளியில் இருந்து வைகை வரை”என்ற ஆங்கில நூலை இலண்டன் மாநகரில் மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் எழுமின் மாநாட்டு அரங்கில் வெளியிட்டார்.
11. 4 லட்சத்திற்கும் மேலான தமிழ்ப் புத்தகங்களை கணினி மயப்படுத்தி காத்து வரும் ரோஜா முத்தையா ஆவணக் காப்பகத்திற்கு தி ரைஸ் எழுமின் மாநாட்டு அரங்கில் மேனாள் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பாலகிருஷ்ணன் IAS அவர்களிடம் 50 லட்ச ரூபாய் வாக்களிக்கப்பட்டது.
12. எதிர்வரும் செப்டம்பர் மாதம் தமிழக அரசின் கணினி தொழில் நுட்பத் துறை, எல்காட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் திட்டமிட்டுள்ள அனைத்துலக கணினி துறை தொழிலதிபர்கள் மாநாட்டில் குறைந்த பட்சம் வளர்ச்சி உள்ளீடு கொண்ட தமிழர் நடத்தும் 50 IT நிறுவனங்களை இணைப்பதற்கு லண்டன் தி ரைஸ் லண்டன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக உலகெங்கும் உள்ள தமிழ் IT துறை தொழிலதிபர்கள் திறனாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை தமிழ் உலகெங்கும் 21 ஆம் நூற்றாண்டு கணினி துறை வளர்ச்சியில் பங்குபெற செய்வதற்காக 'ஆற்றல்' என்கின்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் லண்டன் மாநாடு அறிவித்தது.
13. உலகளாவி வாழும் பொறியாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் நட்பு வலைப்பின்னல், தொடர் உரையாடலை ஊக்குவித்தல், அதன்வழி புத்தாக்கம் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கத்தோடு “எழுமின் அனைத்துலக பொறியாளர் பேரவை “ உருவாக்கப்பட்டது. அதே போல் எழுமின் அனைத்துலகத் தமிழ்ப் பட்டயக் கணக்காளர்கல் பேரவை , எழுமின் அனைத்துலக வழக்கறிஞர் பேரவை ஆகியனவும் இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
14. சென்னையைச் சேர்ந்த Tool Maker என்ற நிறுவனம் 3 ஆண்டு கால ஆராய்ச்சியில் உருவாக்கியிருக்கும் - குளிரூட்டப்பட்ட அல்ல வெப்பமூட்டப்பட்ட உள்ளரங்குகளில் தட்பவெப்ப நிலையை சீராக்க உதவும் Temperature Equaliser என்ற புதிய கண்டுபிடிப்பு இலண்டன் மாநாட்டில் உலகுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது.
தி ரைஸ்-எழுமின் அடுத்த மாநாடு துபாய் நகரில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.