இலங்கையில் அதிக ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும் இடம் : அதற்கான காரணமும் வெளியானது
உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட இலங்கையின்(sri lanka) தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக இருப்பதால், அதிக சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மாகாணத்திற்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் (university of colombo)சமூக ஆய்வுகள் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 9 மாகாணங்களில், தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள்.
நாசா வெளியிட்ட செயற்கைகோள் தரவு
இதற்கு பங்களித்த பல்வேறு காரணிகளில், நாசா சமீபத்தில் வெளிப்படுத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, இலங்கையின் தெற்குப் பகுதிகளும் மாலைதீவின் கிழக்கே உள்ள இந்தியப் பெருங்கடலும் உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளன என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
அதன்படி, உலகின் செல்வந்தர்கள் தென் மாகாணத்திற்கு வருகை தருவதை ஊக்குவிப்பதும், அந்தப் பகுதியில் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதும், குறைந்த ஈர்ப்பு விசை நிலைமைகளை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்களை அந்தப் பகுதியில் நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பேராசிரியர் இந்திரலால் டி சில்வா மேலும் கூறினார்.
சுற்றுலாதுறையை மேம்படுத்தவேண்டும்
குறிப்பாக ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளிடையே ஆயுர்வேத, மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவ முறைகளை உள்ளடக்கிய சுகாதார சுற்றுலாவை சரியான நேரத்தில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் பேராசிரியர் நம்புகிறார்.
2000-02 மற்றும் 2011-13 ஆண்டுகளுக்கான நாட்டின் வாழ்க்கை அட்டவணைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆயுட்காலம் குறித்த தரவுகளின் அடிப்படையில் பேராசிரியர் இந்த தகவலை வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
