இலங்கையின் உச்ச நீதிமன்றம் நம்பிக்கையின் அரண் - சாலிய பீரிஸ்
இலங்கையின் உச்ச நீதிமன்றம் பல காலகட்டங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், நிறைவேற்று அதிகாரத்தின் அத்துமீறலுக்கு எதிரான அரணாகவும் இருந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் இறைமை, உரிமைகளைப் பாதுகாப்பவராகவும் இலங்கை உச்ச நீதிமன்றம் இருந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்

உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரியந்த பெர்னாண்டோவை வரவேற்கும் முகமாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மார்க் அண்டனி பிரேஸ்கர்டில்(Mark Antony Bracegirdle), ஜன கோஷா(Jana Ghosha), வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge), நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இலங்கையின் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் அரசியல் சாசனத்தையும், ஜனநாயக நிறுவனங்களையும், அதன் மக்களையும் அசைக்க முடியாத வகையில் பாதுகாக்கும் துணிவும், பண்பு வலிமையும் உள்ளதாக நிரூபித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த நாட்டின் நீதிமன்றங்கள், குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்கள் மற்றும் உயர்நிலை நீதிமன்றங்கள் இரண்டும் ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்து வருகின்றமை தொடர்பில் நாடு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் இறையாண்மை

கலவானை ஆசனத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து இரண்டாக அதிகரிக்க முற்பட்ட அரசியலமைப்பின் 3 வது திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கடந்த 1981 ஆம் ஆண்டின் டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் தலைமையிலான அமர்வு முன்மொழியப்பட்ட திருத்தம் மக்களின் உரிமையையும் இறையாண்மையையும் மீறுவதாக தீர்மானித்தது எனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.