மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று(24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை
அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் சுகவீனமுற்றுள்ளதால் வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களைக் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அத்துடன், இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை, அடுத்த விசாரணைத் திகதியில் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 7.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 5 காணித் துண்டுகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி, யோஷித ராஜபக்சவுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |