கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் உயிரிழப்பு! புதுக்குடியிருப்பு பகுதியில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்பின்னர் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லையெனில் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தொற்று இனம்காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கு அமைய தகனம் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சுதந்திரபுரம் கொலனி பகுதியை சேர்ந்த குணராசா நிதர்சன் (வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.


