கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு : உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வாய்ப்பு
இலங்கையின் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இலங்கை இராணுவத்தின் கீழ் 10,000 கட்டுமானப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு மேலதிகத் திட்டங்கள் இன்றி வீட்டில் இருக்கும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதி அமைச்சர் டி.பி. சரத் கருத்துத் தெரிவிக்கையில், கட்டுமான நிறுவனங்களுடன் தற்பொழுது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உயர்தர பரீட்சையை முடித்தவர்கள்
"கட்டுமானப் பணியாளர்" என்ற பதவியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொழில் வகையாக தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இத்துறையில் சுமார் 7,500 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்ட போதிலும், தற்போது உள்நாட்டு இளைஞர்களைக் கொண்டே அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இத்திட்டம் முக்கியமாக உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு மேலதிகத் திட்டங்கள் இன்றி வீட்டில் இருக்கும் இளைஞர்களை இலக்கு வைத்துள்ளது.
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் தற்பொழுது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடு
கட்டுமானத் துறையில் இளைஞர்கள் இணைவதற்குத் தயங்குவதற்கான முக்கிய காரணம் அத்துறையில் காணப்படும் நிலையற்ற வேலைவாய்ப்பு. ஒரு நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடையும் போது, பணியாளர்கள் வருமானமின்றி இருக்கும் நிலை ஏற்படுகிறது.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு நிலையான ஊதியம் வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படும், இது அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஒரு கௌரவத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கொடுக்கும்.
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்த போது, கட்டுமானப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்தது.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே இத்துறையில் நிலவும் பாரிய ஆள் பற்றாக்குறை வெளிச்சத்திற்கு வந்தது. இதனை நிவர்த்தி செய்யவே இந்த துரித காலப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |