வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்
10 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துவிட்டதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் 14 இந்திய கப்பல்கள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்திர ஊடக சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படை முற்றுகை
வளைகுடாவில் உள்ள இந்தியக் கப்பல்களைப் பொறுத்தவரை அவை இப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி இந்தியாவுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் ஈரான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தியா நோக்கி சென்ற எம்எஸ்சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபாமினோடாஸ் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஈரானிய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபதாலியை நேரில் வரவழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் வரையில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |