அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள் - விரட்டியடித்த தாய்வான்
தாய்வான் சீனாவிற்கிடையிலான பதற்றங்கள் நாளுக்கு நாள் நீடித்த வண்ணமே உள்ளன.
தாய்வான் தன்னை ஒரு சுதந்திர அரசாக அறிவித்து வருகின்ற நிலைப்பாட்டில் சீனா தொடர்ந்தும் அதனை தன் நாட்டின் ஓர் பகுதியாகவே அடையாளப்படுத்தி வருகின்றமையே அப்பதற்றங்களுக்கான பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தாய்வானை சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தாய்வானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.
சீனா - தாய்வான்
இதனை தாய்வான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சு கண்டறிந்தது. இவற்றில், ஹார்பின் பி.இசட்.கே.-005 ஆளில்லா விமானம் ஒன்று தாய்வான் ஜலசந்தியின் இடைக்கோட்டு பகுதியை மீறி உள்ளே நுழைந்துள்ளது.
இது தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறி சென்றுள்ளது. இதன்பின்னர் அந்நாட்டை சுற்றி வந்து தென்மேற்கு மூலையில் இடைக்கோட்டை மீண்டும் கடந்து சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, இரண்டு செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும் அந்த பகுதியை கடந்து சென்றன. இதனால், அவற்றை விரட்டியடிக்க விமானங்கள், கப்பல்கள் மற்றும் தரை பகுதியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சீன விமானங்களை தாய்வான் விரட்டியடித்தது.
தாய்வான் நாட்டில் இந்த மாதத்தில் இதுவரை சீனா, 362 போர் விமானங்களையும், 194 கடற்படை கப்பல்களையும் அனுப்பி இருந்தது.
2020 செப்டம்பரில் இருந்து, சீனாவின் இந்த நடவடிக்கை சீராக அதிகரித்து காணப்படுகிறது. தாய்வானும் தொடர்ந்து இதனை எதிர்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.