கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து : 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை (Trincomalee) - சேருநுவர பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேருநுவர - கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20.01.2025) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து ஒன்ரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் மேலதிக மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சேருநுவர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |