கல்கிசையில் துப்பாக்கிச் சூடு : 19 வயது இளைஞன் பலி! விசாரணையில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
கல்கிசை பகுதியில் புனித சில்வஸ்டர் வீதியில் இன்று காலை 6.40 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் பணிபுரியும் பிரவீன் நிசங்க என்ற இளைஞரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
குறித்த இளைஞர் சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வெளியான காணொளி
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் கல்கிசை புனித சில்வஸ்டர் வீதியில், துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் அவரை கடந்து செல்வது சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் காலி வீதியை நோக்கி ஓடுவதையும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் உந்துருளியில் இருந்து இறங்கி அவரை துரத்திச் சென்று, கல்கிசை கடற்கரை வீதியில் உள்ள விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் வைத்து மீண்டும் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தெஹிவளை ஓபன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சதுரி என அழைக்கப்படும் நிம்மி சுமேதா பொன்சேகா என்ற போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் பெண்ணின் மகன் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு அப்பெண் மற்றுமொரு, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கோஸ்மல்லி என்பவருடைய உறவினர் ஆவார். பட்டோவிட்ட அசங்கவிற்கும் கோஸ்மல்லிக்கும் இடையில் சிறிது காலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது.
குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் நிலவிவரும் மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
கல்கிசை (Mount Lavinia) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (5) அதிகாலை கல்கிசை - கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிந்த 19 வயதுடைய இளைஞன் தெஹிவளை - ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகம்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 மணி நேரம் முன்
