சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் : சாதனை படைத்த யாழ் மாணவன்
புதிய இணைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் சிறந்த வைத்தியராக வருவதே தனது இலக்கு குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் இந்த பெறுபேறுகளை பெற்கொள்வதற்கு தன்னை வழிப்படுத்திய பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
குறித்த மாணவனின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நேற்றிரவு வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் ஆனந்தசோதி லக்சயன், 194 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் அகில இலங்கை அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் காலி - அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் மாணவியான ஷானுடி அமயா அஸ்வினி என்பவர் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் குறித்த பரீட்சையில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள்
இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனை அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நேற்று (03) இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.
அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளைப் பார்வையிடலாம்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற நிலையில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அத்துடன் இந்த ஆண்டு 901 விசேட தேவையுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதாகவும், இதில் 12 பேர் பிரெய்லி எழுத்து முறையை பயன்படுத்தியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
