முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
முற்றிலும் தடை
இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு பரீட்சை மோசடிகளை தவிர்குமாறும், கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் சுமார் 1,500க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆலயங்களை தரிசித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

செய்தி - சிவா
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில், வவுனியா மாவட்டத்தில் இம்முறை 2,630 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்தப் பரீட்சார்த்திகளில், 2,018 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாகவும், 612 பேர் தனியார் பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளைச் சீரான முறையில் நடாத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 20 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |