வெளிநாடொன்றில் அனர்த்தம் : நோயாளியை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி கடலில் வீழ்ந்தது
நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில்(japan) நாகசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மருத்துவப் போக்குவரத்து உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கடலோர காவல்படையினரால் மூவர் மீட்பு
கடலோர காவல்படையினர் இரு விமானங்கள், 3 கப்பல்களை அனுப்பி கடலில் வீழ்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 66 வயதான உலங்கு வானூர்தி விமானி, உதவியாளர், மருத்துவப் பணியாளர் ஆகியோர் கடலோர காவல்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
வெப்பநிலை குறைபாடு பாதிப்பு
காப்பாற்றப்பட்ட மூவருக்கும் ஹைபோதெர்மியா எனப்படும் உடல் வெப்பநிலை குறைபாடு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்திற்கான உண்மையான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
