கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல்
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கடந்த 10 வருடங்களாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் விவசாயத் திணைக்களத்திடம் மீள ஒப்படைக்கப்பட்ட சுமார் 350 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள், இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலங்களாகக் காணப்படுகின்றமை குறித்து அப்பகுதி விவசாயிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த 350 ஏக்கர் விவசாயக் காணியில் கடந்த 10 வருடங்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. பின்னர், அக்காணிகள் விவசாயத் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக மீள ஒப்படைக்கப்பட்டன.
வளமான விவசாய நிலம்
இருப்பினும், நிலம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் பெரும்போகத்தில், குறித்த வயல் காணிகளில் எந்தவிதமான நெற்செய்கையும் மேற்கொள்ளப்படாமல் பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. வளமான விவசாய நிலம் இவ்வாறு பயிரிடப்படாமல் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளமை உணவு உற்பத்திக்கும் விவசாயப் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வளமான 350 ஏக்கர் வயல் காணி வீணாகத் தரிசு நிலமாகக் கிடப்பதைத் தவிர்த்து, அப்பகுதியிலுள்ள வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஒரு போகத்திற்காவது நெற்செய்கையை மேற்கொள்வதற்காக இக்காணிகளைத் தற்காலிகமாகப் பகிர்ந்தளித்திருக்கலாம்" எனத் தமது ஆதங்கத்தையும் ஆலோசனையையும் முன்வைத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, எதிர்வரும் போகங்களிலாவது இக்காணிகளைப் பயனுள்ள விவசாய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவும், வாழ்வாதாரம் இன்றித் தவிக்கும் வறிய விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |