நாடளாவிய ரீதியில் 30000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள்!
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று (21.10.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசியப் பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் வெற்றிடங்கள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “மேல் மாகாணத்தில் 4,630, தெற்கில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேற்கு மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 மற்றும் வடக்கு மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசியப் பாடசாலைகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் க.பொ.த. உயர்தர சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வெற்றிடங்களுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி முதல் ஆட்சேர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்தை பூர்த்தி செய்து, பணியமர்த்தப்படாத 353 பட்டதாரிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
மேலும், ஆசிரியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மீளாய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். குறித்த வெற்றிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.” என பிரதமர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
