யாழ். பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தியாகி திலீபன் அவர்களது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று காலை 8:00 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதமும், நினைவு அஞ்சலியும் பருத்தித்துறை முருகன் கோயிலடியில் அமைந்துள்ள தியாகி திலீபன் அவர்களது நினைவு தூபியில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றது.
உண்ணாவிரதம் நிறைவு
தியாகி திலீபன் மரணித்த நேரத்தில் உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டு ஈகைச்சுடரினை மாவீரரின் சகோதரன் சி. வேந்தன் ஏற்றி வைக்க மலர் மாலைகளை காணாமல் ஆக்கப்பட்ட போராளி அன்பு அவர்களின் துணைவியார் விஜயபாமா, யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்க தலைவி கோதை ஆகியோர் அணிவித்தனார்.

மலர் அஞ்சலியினை மாவீரரின் சகோதரர் கதிர் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அடையாள உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதற்கு குளிர் பானங்களை பருத்தித்துறை வர்த்தகர் சங்க தலைவர் இரா மயூரன் வழங்கிவைத்தார். தியாகி திலீபன் அவர்களது நினைவாக மரக்கன்றுகளை பருத்தித்துறை நகர சபை தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் வழங்கிவைத்தார்.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், கட்சி முக்கியஸ்தர் கதிர், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் உப தவிசாளர் இந்திரன், மற்றும் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அரசியல் சமூக செய்ற்பாட்டாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |