டிலான் சேனாநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது
காலிமுகத் திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான டிலான் சேனாநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலானது தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம்

மிரிஹான காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து, கடந்த 14 ஆம் திகதி டிலான் சேனாநாயக்க மீது கத்தியால் குத்தி கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை, கொம்பனிவீதி, பொரள்ள பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 44 மற்றும் 28 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் காலி முகத்திடல் போராட்டங்களில் அடிக்கடி பங்கேற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது தோழி ஒருவருடன் டிலான் சேனாநாயக்க முரண்பட்ட போது, அதில் சந்தேகநபர்களில் ஒருவர் தலையிட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர்களில் ஒருவரின் ஆடையை பிடித்து, டிலான் சேனாநாயக்க அச்சுறுத்திய சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்கில் இந்தக் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மிரிஹான காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.